ஹோர்முஸ் நீரிணைத் தாக்குதலில் இரு இந்தியர்கள் மாயம்: இந்தியா கண்டனம்

ஹோர்முஸ் நீரிணைத் தாக்குதலில் இரு இந்தியர்கள் மாயம்: இந்தியா கண்டனம்

படம்: ராய்ட்டர்ஸ்

12 Oct 2026 - 4:38 pm

2 mins read

புதுடெல்லி: மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைக்கு இடையே, வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இவ்விவகாரத்தில் அரசதந்திரப் பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியைத் திரும்பக் கொண்டுவர இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியக் கடலோடிகளின் பாதுகாப்பே முதன்மை இலக்கு என்றும் அனைத்துலக கடல்சார் வர்த்தகம், கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் அனைத்துலகக் கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஆளில்லா வானூர்தி, ஏவுகணைகளைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில், கப்பலில் பயணம் செய்த இந்தியக் கடலோடிகள் இருவரைக் காணவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

நிகரகுவா நாட்டுக் கொடியுடன் பயணம் மேற்கொண்ட ‘எம்டி பெட்ரோ டால்ஃபின்’ என்ற வணிகக் கப்பல் மீது ‘டிரோன்’ தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பயணம் செய்த 11 இந்தியக் கடலோடிகளில் ஒன்பது பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய இருவரைக் காணவில்லை.

அதேபோல், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற ‘எம்டி வால்தேரா’ என்ற மற்றொரு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் அக்கப்பலில் தீப்பற்றியது. அதிர்ஷ்டவசமாக, அதில் இருந்த 11 இந்திய மாலுமிகளும் காயமின்றித் தப்பினர்.

இச்சம்பவம் குறித்துக் கவலை தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சு, வணிகக் கப்பல்கள், கடலோடிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஓமான் நாட்டின் சோஹார் கடற்பகுதியில் மாயமான இரு இந்தியர்களைத் தேடும் பணியில் அந்நாட்டின் கடலோரக் காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம், ஓமான் அரசு அதிகாரிகளுடனும் கப்பல் நிர்வாக நிறுவனங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் மாலுமிகளின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஹோர்முஸ் நீரிணைமத்திய கிழக்குகடலோடிட்ரோன்ஆளில்லா வானூர்திஏவுகணைகப்பல்போக்குவரத்து