புவனேஸ்வர்: சட்டவிரோத கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக ஒடிசா காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, இந்த விபத்து நிகழ்ந்தபோது பேரளவிலான கற்கள் விழுந்ததால், ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சனிக்கிழமை (ஜனவரி 3) இரவு, ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் இயங்கிவந்த கல் குவாரியில் இந்தத் துயரச்சம்பவம் நிகழ்ந்தது. இந்தக் குவாரி இயங்குவதற்கு சட்டபூர்வ அனுமதி பெறப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடி விபத்தில் இருவர் பலியான நிலையில், மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று, விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
வெடி விபத்தின்போது விழுந்த கற்கள் அளவில் பெரிதாக இருப்பதால், அவற்றை அகற்றுவதில் சிரமம் நிலவியது. மேலும், குவாரியில் பரவலாகக் குப்பைகளும் சிதறிக்கிடக்கின்றன.
பாறைகளை அகற்றும் நடவடிக்கையில் கனரக வாகனங்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க நாய்களும் ஈடுபடுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


