புதுடெல்லி: இந்தியாவின் தொழில்துறையில் இதுவரை இல்லாத வகையில், ஒரே ஆண்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலகடத்தில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் இயங்கிவரும் மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 21.3 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் இது கடந்த ஆண்டைவிட 10.8 விழுக்காடு அதிகம் என்றும் இந்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் குறித்து அந்நாட்டின் நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சு ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான அறிக்கையில் இடம்பெற்றுள்ள தரவுகள், நாட்டின் தொழில் வளர்ச்சி பாரம்பரிய பெருநகரங்களைக் கடந்து, சிறு மாநிலங்களுக்கும் பரவியுள்ளதை உறுதிசெய்துள்ளது.
வழக்கமாக மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களிலேயே அதிக நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொழில்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
பீகார் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 18 விழுக்காடு உயர்ந்து 49,500ஐ எட்டியுள்ளது.
இதேபோல் உத்தரப் பிரதேச மாநிலம் 18 விழுக்காடு வளர்ச்சியுடன் 1.87 லட்சம் நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
டெல்லிக்கு அடுத்தபடியாக, நாட்டின் மூன்றாவது பெரிய தொழில் மையமாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், 16 விழுக்காட்டு உயர்வுடன் 77,658 நிறுவனங்களைக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்னிலக்கக் கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள், எளிமையாக்கப்பட்ட அரசு நடைமுறைகளே இந்தப் பரவலான வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
மொத்த நிறுவனங்களில் சேவைத் துறை 66 விழுக்காடு பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. வணிக ஆலோசனை, வர்த்தகம், சொத்துச் சந்தை, நிதிச்சேவைகள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அதேநேரம், உற்பத்தித்துறை 7 விழுக்காடு வளர்ச்சியுடன் நான்கு லட்சம் நிறுவனங்களையும் விவசாயம் சார்ந்த துறைகள் 6 விழுக்காடு வளர்ச்சியுடன் 92,980 நிறுவனங்களையும் எட்டியுள்ளன.


