விண்வெளி ஆய்வு நிலையத் தேர்வில் தில்லுமுல்லு செய்த இருவர் கைது

விண்வெளி ஆய்வு நிலையத் தேர்வில் தில்லுமுல்லு செய்த இருவர் கைது

1 mins read
b39dde51-0123-4a38-8e1b-7b04e73e10d1
இருவரும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி விடையளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

திருவனந்தபுரம்: இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பு எழுத்துத் தேர்வில் தொழில்நுட்பத்தைக் கொண்டு தில்லுமுல்லு செய்ததாகக் கூறி இளையர்கள் இருவரைக் காவல்துறை கைதுசெய்தது.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிலையம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொழில்நுட்பர்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தியது.

அப்போது, அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுனில், 26, சுமித், 25, என்ற இருவரும் கைப்பேசிகள், திறன் கைக்கடிகாரங்கள், காதொலிக்கருவிகளைப் பயன்படுத்தி, தேர்வில் தில்லுமுல்லு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் கைப்பேசியில் கேள்விகளைப் படமெடுத்து அனுப்பி, காதொலிக்கருவி வழியாக விடைகளைக் கேட்டு எழுதியதாக மனோரமா செய்தி தெரிவித்தது.

இதனால், எல்லா வினாக்களுக்கும் அவர்களால் விடையளிக்க முடிந்ததாகக் காவல்துறை கூறியது.

வெவ்வேறு மையங்களில் தேர்வெழுதிய அவ்விருவரையும் காவல்துறை கைதுசெய்தது.

குறிப்புச் சொற்கள்