பரேலி: இந்தித் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ளது நடிகை திஷா பதானிவீடு. கடந்த 12ஆம் தேதி மர்ம நபர்கள் இருவர் இந்த வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் பெரும் பரபரப்பு நிலவியது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கோல்டி பிரார், ரோஹித் கோதாரா கும்பலைச் சேர்ந்த ரவீந்திரா, அருண் எனத் தெரியவந்தது.
அண்மையில் ஆன்மிகத் தலைவர்கள் குறித்து நடிகை திஷா பதானி விமர்சித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாகச் சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய ரவீந்திரா, அருண் ஆகிய இருவரும் காசியாபாத் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை உத்தரப் பிரதேச மாநில, அதிரடிப்படை, டெல்லி காவலர்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அவர்கள் இருவரும் இறந்தனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.