புதுடெல்லி: ஏர் இந்தியாவின் மேலும் இரண்டு விமானிகள் ஆரம்பக்கட்ட போதைப்பொருள் சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிப் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், விமானத்தை இயக்க அவ்விருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த முடிவுகள் வருவதற்கு வழக்கமாக 24 முதல் 48 மணிநேரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
தாய்லாந்தின் புக்கெட்-டெல்லி விமானத்தில் ஏற்பட்ட சம்பவத்தில் பலர் காயமடைந்ததைத் தொடர்ந்து, டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தனது எல்லா விமானிகளிடமும் போதைப்பொருள் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
புக்கெட் - டெல்லி விமானத்தின் தலைமை விமானி, விமானம் தரையிறங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிறுநீர் பரிசோதனைகளில் தோல்வியடைந்ததால், அனைத்து விமானிகளும் போதைப்பொருள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அந்நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.
இதுவரை 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமானிகளிடம் அந்தப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 4ஆம் தேதி, தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் திடீரென வானில் 300 அடி கீழே இறங்கியது. அதனால், 13 பயணிகளும் நான்கு விமானப் பணியாளர்களும் காயமடைந்தனர்.
137 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களுடன் பறந்த அந்த விமானம், பின்னர் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது. அந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
விமானியின் போதைப்பொருள் பரிசோதனை முடிவுக்கும் விமானம் திடீரென கீழே இறங்கியதற்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த அதிகாரபூர்வத் தகவலும் இல்லை.


