இந்தியாவில் மேலும் இரு யுரேனியச் சுரங்கங்கள்: அணுசக்தி அமைச்சு அறிவிப்பு

இந்தியாவில் மேலும் இரு யுரேனியச் சுரங்கங்கள்: அணுசக்தி அமைச்சு அறிவிப்பு

1 mins read
edeb7ff8-b601-4e77-8737-356bafb12251
ஆந்திரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் யுரேனியம் சுரங்கங்களை யுசிஐஎல் கையாண்டு வருகிறது.  - படம்: தி இந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக இரண்டு யுரேனிய சுரங்கத் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக அதன் மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு புதன்கிழமை எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் இத்தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தானின் சிகர் மாவட்டம், சத்தீஸ்கரின் ஜஜ்வால் மாவட்டம் ஆகிய இடங்களில்தான் அமைச்சர் குறிப்பிட்ட யுரேனிய சுரங்க நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்விரு நிலையங்களும் நாள்தோறும் 2,500 டன்னைக் கையாளும் திறன்கொண்டதாக நிறுவப்படும்.

இதற்கான சட்டபூர்வ ஒப்புதல்களைப் பெற வேண்டிய நடைமுறை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருவதாக அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுரேனியத்தை அகழ்ந்தெடுப்பதற்கான உள்நாட்டுத் திறனை அதிகரிக்கும் முன்னெடுப்புகளை அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான யுரேனியம் கார்ப்பேரஷன் ஆஃப் இந்தியா (யுசிஐஎல்) மேற்கொண்டு வருவதாகவும், எதிர்வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் நோக்கில், புதிய யுரேனியம் சுரங்கத் திட்டங்களுக்கு யுசிஐஎல் திட்டமிட்டு வருவதாகவும் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தமது பதிலில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஆந்திரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் யுரேனியம் சுரங்கங்களை யுசிஐஎல் கையாண்டு வருகிறது. அணு உலைகளில் யுரேனியம் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்