மதுப்பழக்கத்தைக் கைவிட மருந்து குடித்த இருவர் உயிரிழப்பு

மதுப்பழக்கத்தைக் கைவிட மருந்து குடித்த இருவர் உயிரிழப்பு

படம்: ஏஎன்ஐ

19 Nov 2026 - 6:33 pm

1 mins read

பெதுல்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்தில் மதுப்பழக்கத்தைக் கைவிட வழங்கப்பட்ட மூலிகை கசாயத்தை அருந்திய ஆடவர் இருவர் உயிரிழந்தனர்; மேலும் ஐவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிச்சோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதகெடா கிராமத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 19) இத்துயரச் சம்பவம் நேர்ந்தது.

மதுப்பழக்கத்திலிருந்து விடுபட பலரும் போலிச் சாமியார் ஒருவரிடம் சென்றனர். அங்கு வழங்கப்பட்ட சிவப்புநிற மூலிகைக் கசாயத்தை அருந்திய ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் தமக்குக் கடுமையான வாந்தியும் தலைசுற்றலும் ஏற்பட்டதாக உயிர் பிழைத்த ஒருவர் கூறினார்.

தமக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அங்கு ஏறத்தாழ 20 முதல் 25 பேர் சென்றிருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் அம்மருந்து பல ஆண்டுகளாகக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுவந்துள்ளது.

இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு வழக்குப் பதிவுசெய்தனர். அதோடு முக்கியக் குற்றவாளி உட்பட மூவரைக் கைதுசெய்து காவலில் வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஐவரின் உடல்நிலை சீராக உள்ளதாகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கமலேஷ் கர்பூசே தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் தெகுட் பகுதியைச் சேர்ந்த ராம்கிஷோர் ஜாடே, இம்லி தானாவைச் சேர்ந்த சஞ்சய் உய்கே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்