ஸ்ரீநகர்: இந்தியாவுக்குள் ஜம்மு காஷ்மீர் வழியாக ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.
இந்தியாவின்மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தும் நோக்கில் ஊடுருவல்களைத் தீவிரவாதிகள் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், காஷ்மீரில் பல்வேறு பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க ‘ஆப்பரேஷன் பிம்பிள்’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கியது.
குப்வாராவில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருந்த இரு பயங்கரவாதிகளை ராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
இதனையடுத்து, தேடுதல் வேட்டையைப் பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் இரு சிறைச்சாலைகளில் சனிக்கிழமையன்று (நவம்பர் 7) காலை பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பாகச் சோதனை நடத்தப்பட்டது.
ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறைச்சாலை குப்வாரா மாவட்ட சிறைச்சாலை ஆகியவற்றில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு, துணை ராணுவப் படையினர் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைகளுக்குள்ளே நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உளவுத் துறை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
குல்காமில் தீவிரவாதக் குழுக்கள் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தனிநபர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பலரின் வீடுகளில் அம்மாவட்டக் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

