இவருக்கு அவர் கணவருடனும் அவருக்கு இவர் கணவருடனும் கல்யாணம்!

2 mins read
b5d3b1fc-cc62-4b8e-a16e-e45931793e52
பெண்கள் இருவர் தங்கள் கணவர்களை மாற்றி மணந்துகொண்ட சம்பவம் இந்தியாவின் பீகாரில் நிகழ்ந்துள்ளது. மாதிரிப்படம் -

பாட்னா: தன் மனைவி, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததை அடுத்து, அந்தக் கள்ளக்காதலனின் மனைவியையே திருமணம் செய்து, ஆடவர் ஒருவர் பழிதீர்த்துக்கொண்டார்.

இந்த வினோத நிகழ்வு இந்தியாவின் பீகார் மாநிலம், ககரியா மாவட்டத்தில் நிகழ்ந்தது.

ரூபி தேவி என்ற அப்பெண், 2009ஆம் ஆண்டு நீரஜ் என்பவரை மணந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன.

ஆனாலும், சில ஆண்டுகள் கழித்து, தன் மனைவிக்கு முகேஷ் என்பவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதை நீரஜ் கண்டுபிடித்தார்.

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரூபியும் முகேஷும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். தம் பிள்ளைகளில் மூவரையும் ரூபி தம்முடன் அழைத்துச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, தன் மனைவியை முகேஷ் கடத்திச் சென்றுவிட்டதாகக் காவல்துறையில் நீரஜ் புகாரளித்தார்.

முகேஷுக்கும் ஏற்கெனவே திருமணமாகி, இரு பிள்ளைகளும் உள்ளனர். இதில் வியப்பு என்னவெனில், அவரின் மனைவி பெயரும் ரூபி தேவிதான்.

முகேஷையும் தன் மனைவியையும் பழிவாங்க விரும்பிய நீரஜ், அதற்கு முகேஷின் மனைவி ரூபியை மணந்துகொள்வதுதான் வழி என முடிவுசெய்தார்.

அதற்கு முகேஷின் மனைவியும் இணங்கவே, இருவரும் சென்ற மாதம் 11ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். முகேஷின் இரு பிள்ளைகளையும் நீரஜ் ஏற்றுக்கொண்டார்.

இப்போது, இரு குடும்பங்களும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இரு வேறு நகரங்களில் வாழ்ந்து வருகின்றன.

இந்த வியப்பளிக்கும் சம்பவத்திற்கு இணையவாசிகள் பலரும் வேடிக்கையாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

"மணமானவர்கள் மீண்டும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கின்றனர். நான் இன்னும் தனியாளாகவே இருக்கிறேன்," என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

"ஒவ்வொரு வினைக்கும் நிகரான எதிர்வினை உண்டு," என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் குழந்தைகள்தான் குழப்பத்தில் இருப்பர் எனக் கூறியுள்ளார் இன்னொருவர்.