தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய இறக்குமதிகள் மீது 26% வரி விதித்துள்ள அமெரிக்கா

2 mins read
e0618aac-ed75-4e77-949f-4089cc463933
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் பிப்ரவரி 13ஆம் தேதியன்று சந்தித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 26 விழுக்காடு வரி விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தம் நாட்டுடன் வர்த்தக ரீதியாக இணைந்துள்ள பிற நாடுகளுக்கு புதன்கிழமையன்று (ஏப்ரல் 4) வர்த்தக வரிகளை அறிவித்துள்ளார்.

பதிலடி வரிகளாக திரு டிரம்ப் வருணித்துள்ள இந்த வரிகள், இந்திய இறக்குமதிகளுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 5ஆம் தேதி முதல் எல்லா அமெரிக்க இறக்குமதிகளுக்கும் 10 விழுக்காட்டு அடிப்படை வரியை விதிக்கும் அதன் பெருந்திட்டத்தில், இந்திய இறக்குமதிகளுக்கான புதிய வரி அங்கம் வகிக்கிறது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கெனவே உள்ள 10 விழுக்காட்டு அடிப்படை வரி மாற்றப்படவில்லை.

ஆனால், சீனாவிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு 34 விழுக்காட்டு வரி, வியட்னாமிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு 46 விழுக்காட்டு வரி என வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விழுக்காட்டில் வரிகள் விதிக்கப்பட்டன.

“இந்தியா எங்களது ஏற்றுமதிகளுக்கு 52 விழுக்காடு வரி விதிக்கிறது. பல்லாண்டுகளாக நாங்கள், பதிலுக்கு எந்த வரியையும் விதிக்கவில்லை,” என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தியா, தன்னைச் சேரும் ஏற்றுமதி வரிகளின் மீது விதிக்கும் வர்த்தக வரிகளையும் வரிகள் சாராத இதரவகை வர்த்தகத் தடுப்புகளையும் கருத்தில் கொண்டு இந்த 26 விழுக்காடு வரிகள் விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தியா உருவாக்கியுள்ள வர்த்தக இடையூறுகள் அகற்றப்பட்டால் அமெரிக்க ஏற்றுமதிகள் ஆண்டுக்கு 5.3 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என்றது வெள்ளை மாளிகை.

குறிப்புச் சொற்கள்