நியூயார்க்: ரஷ்யா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கடுமையான பொருளியல் தடைகள் விதிக்க வழிவகுக்கும் புதிய அமெரிக்க மசோதா குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துத் தனது கவலையை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் பெருமளவில் எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இந்தப் புதிய சட்டம் பெரும் வர்த்தகச் சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற உயர்நிலைச் சந்திப்பில் இருநாட்டு வெளியுறவுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகள், வர்த்தகப் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
அப்போது, புதிய சட்டத்தால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஜெய்சங்கர் நேரடியாகக் கவலையைத் தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்தப் புதிய சட்டத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது நூறு விழுக்காடு வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, ஈரான் மீது பொருளியல் தடைகளை விதிக்கும் புதிய அமெரிக்கச் சட்டம், இந்திய-அமெரிக்க உறவில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திரு ஜெய்சங்கர். அதில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரூபியோவை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவருடனான சந்திப்பின்போது அமெரிக்காவின் புதிய சட்டம் தொடர்பான இந்தியாவின் கவலைகளை வெளிப்படுத்தியதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உக்ரேன், மத்திய கிழக்கு வட்டாரத்தின் தற்போதைய சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, ஈரானுடன் பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்படக்கூடிய தடைகள் குறித்து ரூபியோவும் ஜெய்சங்கரும் விவாதித்ததாக நியூயார்க்கில் நடந்த அவர்களது சந்திப்பிற்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகள் இடையேயான உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்தே அந்த அறிக்கையில் முக்கியமாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெய் கொள்முதலுக்கு வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய நடவடிக்கைகள் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று இந்தியா ஏற்கெனவே வாஷிங்டனிடம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய குறைந்த விலையில் எரிபொருள் தேவை என்பதை புதுடெல்லி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தங்கள் நாட்டின் பொருளியல் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என ஏற்கெனவே இந்திய வெளியுறவு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தப் போக்கால் இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது என்றும் எதிர்வரும் நாள்களில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் அனைத்துலக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
