புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உத்தரப் பிரதேசத்தின் ராம்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (மே 18) தெரிவித்தது.
எல்லை தாண்டிய கடத்தலில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு வேவு பார்த்ததாகவும் சந்தேகிக்கப்படும் ஷஹ்ஸாட் வஹப், உத்தரப் பிரதேசக் காவல்துறையின் சிறப்புப் பணிக்குழுவால் கைதுசெய்யப்பட்டார்.
தேசியப் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களை பாகிஸ்தானுக்கு அவர் வழங்கியதாக பணிக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த சில ஆண்டுகளாக பலமுறை பாகிஸ்தானுக்குச் சென்று வந்த ஷஹ்ஸாட் முக ஒப்பனைப் பொருள்கள், துணிமணிகள், தாளிப்புப் பொருள்கள் போன்றவற்றைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதேவேளையில் பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு ஷஹ்ஸாட் வேவு பார்த்ததாக பணிக்குழு தெரிவித்தது.
இந்தியாவில் பாகிஸ்தான் உளவுத்துறை முகவர்களுக்கு ஷஹ்ஸாட் பணமும் சிம் அட்டைகளும் வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் உளவுத்துறையில் பணிபுரிவதற்காக ராம்ப்பூர் மாவட்டத்திலிருந்தும் உத்தரப் பிரதேசத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் பாகிஸ்தானுக்கு ஷஹ்ஸாட் ஆள் அனுப்பியதாகவும் பணிக்குழு கூறியது.
“அத்தகையோருக்கான விசாவுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை முகவர்கள் ஏற்பாடு செய்தனர்,” என்று அது சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பிய குற்றச்சாட்டில் ஹரியானாவைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைதுசெய்யப்பட்ட நிலையில், தற்போது ஷஹ்ஸாட் கைது செய்யப்பட்டுள்ளார்.