ஹைதராபாத்: இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா பெண்ணுக்கு இபோலா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு புதன்கிழமை (மே 27) தெரிவித்தது.
தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் அவருக்கு இபோலா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது குறித்துத் தகவல் இல்லை.
இபோலா தொற்றைப் பொதுச் சுகாதார அவசரநிலையாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் இபோலா பாதிப்பு எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
இதையடுத்து, உகாண்டா பெண் பாதிக்கப்படவில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
“இபோலா தொற்றுக்கான பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்துள்ளது,” என்று சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
ஒருவேளை, அந்தப் பெண்ணுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் 2014க்குப் பிறகு தெற்காசிய நாடான இந்தியாவில் முதல் இபோலா பாதிப்பாக அது இருந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
“உகாண்டாவிலிருந்து வந்த 28 வயது பயணிக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார்,” என்று தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையின் டாக்டர் அனில் குமார் பனாகர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அவருக்கு லேசான உடல் வலி இருந்தது என்று அமைச்சு குறிப்பிட்டது.
உகாண்டாவிலிருந்து அகமதாபாத்துக்குச் சென்ற அந்தப் பெண், பின்னர் தென்னிந்திய நகரமான பெங்ளூருக்குச் சென்றார்.
விமான நிலையங்கள், பிற நுழைவு வாயில்களில் பரிசோதனை, கண்காணிப்புகளை இந்தியா தீவிரப்படுத்தியிருக்கிறது. முன்னெச்சரிக்கையாக அது ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், காங்கோ, உகாண்டா, தென்சூடான் ஆகிய நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியா தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, இவ்வாரம் தலைநகரில் நடைபெறுவதாக இருந்த இந்தியா-ஆப்பிரிக்கா உச்சநிலை மாநாடும் ஒத்திவைக்கப்பட்டது.

