தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆதரவுடன் முதல்வராகும் உமர் அப்துல்லா

2 mins read
ஹரியானாவின் முதல்வராக நயாப் சிங் சைனி அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்பு
bebaa8ff-015d-4ef7-b43e-da820fb2bbe6
ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றிபெற்றது. பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா (இடது), ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா (வலது), இவர்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா. - படம்: இந்திய ஊடகம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் நடைப்பெற்றது. இத்தேர்தலில், பாஜக ஹரியானாவிலும் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு - காஷ்மீரிலும் வெற்றிபெற்றன. இரு கட்சிகளும் வெற்றி பெற்ற மாநிலங்களில் விரைவில் ஆட்சி அமைக்க முனைப்புக் காட்டி வருகின்றன.

ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை ஆளுநரைத் தேசிய மாநாட்டுக் கட்சிக் தலைவர் உமர் அப்துல்லா சனிக்கிழமை (அக்டோபர் 12) சந்தித்தார்.

இதற்கிடையே, தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு - காஷ்மீரில் புதிய அரசை அமைக்க காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ஆதரவினை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா உட்பட அக்கட்சியின் ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்ட காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டம் அக்டோபர் 11ஆம் தேதி நடந்தது. அதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவுக் கடித்தில் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து தாரிக் ஹமீது கர்ரா கூறுகையில், “தேசிய மாநாட்டுக் கட்சிக்கு எங்களின் ஆதரவினையும் வழங்கியுள்ளோம். அதற்கான கடிதத்தை அவர்களிடம் வழங்க உள்ளோம். உமர் அப்துல்லாவை முதல்வராக ஏற்றுக்கொள்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. ஜம்முவின் தோடா தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் மேஹ்ராஜ், பாஜக வேட்பாளர் கஜாய் சிங் ராணாவைத் தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானாவின் புதிய முதல்வர் நயாப் சிங் சைனி

பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஹரியானாவின் புதிய முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் நயாப் சிங் சைனி.
பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஹரியானாவின் புதிய முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் நயாப் சிங் சைனி. - படம்: இந்திய ஊடகம்

ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் தனது பதவியை விட்டு விலகினார். இதையடுத்து புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து புதிய அரசு வரும் 17ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனியை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவரோடு சிலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்