நியூயார்க்: நியூயார்க்கில் நடைபெறும் பாலஸ்தீன விவகாரம் குறித்த ஐக்கிய நாட்டு மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது பற்றி அமெரிக்கா அக்கறை தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நீடிக்கும் சூழலில் இரு நாட்டுத் தீர்வு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. அதில் இந்தியா உட்பட கிட்டத்தட்ட 120 நாடுகளும் அமைப்புகளும் பங்கேற்கின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது.
மாநாட்டை இஸ்ரேலும் அமெரிக்காவும் புறக்கணித்துவிட்டன. அதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வெளிநாட்டு அரசாங்கங்களை அமெரிக்கா கடந்த மாதம் கேட்டுக்கொண்டிருந்தது.
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் எஞ்சியிருக்கும் பிணையாளிகளை விடுவிக்கவும் முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில் மாநாடு அவற்றுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா கருதுகிறது. காஸாவில் நிரந்த அமைதி உண்டாக வேண்டும் என்று விரும்புவதாக வாஷிங்டன் சொல்கிறது.
திங்கட்கிழமை (ஜூலை 29) தொடங்கிய மாநாட்டுக்கு பிரான்சும் சவூதி அரேபியாவும் கூட்டாகத் தலைமை தாங்குகின்றன.