பாட்னா: மணமக்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி மாலையிட்டுக் கொண்டதும் மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு மணமேடையிலேயே மாண்டுபோனார்.
இதனால், மகிழ்ச்சியான திருமண நிகழ்வு, துக்க நிகழ்வாக மாறிப்போனது.
இந்தச் சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலம், சீத்தாமடி மாவட்டத்தில் உள்ள இந்தர்வா எனும் சிற்றூரில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்தது.
மனித்தார் எனும் சிற்றூரைச் சேர்ந்த சுரேந்திர குமார், 22, தமது ஊரிலிருந்து ஊர்வலமாகக் கிளம்பி, மணமகளின் ஊருக்கு வந்து சேர்ந்தார்.
அவர் வந்து சேர்ந்ததும் எல்லாரது முகங்களிலும் மகிழ்ச்சி தென்பட்டது. சற்று நேரத்தில் மணமேடை ஏறி, மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.
அப்போது, அதிக சத்தத்துடன் இசை ஒலிக்கப்பட்டதாகவும் திருமண ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஆட்டம் போட்டதாகவும் கூறப்பட்டது.
அளவிற்கதிகமான சத்தத்தால் அசௌகரியமாக உணர்ந்த சுரேந்திர குமார், இசையை நிறுத்துமாறு அல்லது ஒலியின் அளவைக் குறைக்குமாறு பலமுறை கேட்டுக்கொண்டார். ஆனாலும், அவரது கோரிக்கை செவிமடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சற்று நேரத்தில் மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கிச் சரிந்தார். உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மணநாளே அவருக்குக் கடைசி நாளாகிப் போக, மறுநாள் அவருக்கு இறுதிச் சடங்கு இடம்பெற்றது.