ஐஃபோனுக்குப் பணமில்லை; விநியோக ஊழியரைக் கொன்று எரித்த ஆடவர்

ஐஃபோனுக்குப் பணமில்லை; விநியோக ஊழியரைக் கொன்று எரித்த ஆடவர்

1 mins read
379c3576-b145-4862-9bbf-275c5b52c3c5
கொலை செய்த ஹேமந்த் தத், கொலை செய்யப்பட்ட ஹேமந்த் நாயக்கின் உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி, தனது மோட்டார்சைக்கிளில் எடுத்துச் சென்றது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. படங்கள்: இந்திய ஊடகம் -

பெங்களூரு: இணையம் வழியாக வாங்கிய ஐஃபோனுக்கான தொகையைச் செலுத்த பணமில்லாததால், அதனைக் கொண்டுவந்த விநியோக ஊழியரையே கொலை செய்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் தத், 20. அவர் 'இ-கார்ட்' இணையத்தளம் வழியாக ஐஃபோன் ஒன்றுக்குப் பணிப்பு (ஆர்டர்) செய்திருந்தார்.

இதனையடுத்து, இம்மாதம் 7ஆம் தேதி அவரது வீட்டிற்கு ஐஃபோனை விநியோகிக்கச் சென்றார் ஹேமந்த் நாயக், 23, என்ற ஆடவர்.

ஐஃபோனுக்கான ரூ.46,000 பணத்தைத் தரும்படி தத்திடம் நாயக் கேட்டுள்ளார். கையில் பணமில்லாத தத், நாயக்கைக் கத்தியால் குத்திக்கொன்றார்.

பின்னர் தன் வீட்டிலேயே நாயக்கின் உடலை வைத்திருந்த தத், நான்கு நாள்களுக்குப் பிறகு உடலைச் சாக்கு மூட்டையில் எடுத்துச் சென்று, அருகிலிருந்த ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதியில் எரித்துவிட்டார்.

எரிந்த நிலையில் சடலம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறை விசாரணையை முடுக்கிவிட, ஹேமந்த் தத்தின் குற்றச்செயல் அம்பலமானது.

நாயக்கின் சடலத்தைத் தனது மோட்டார்சைக்கிளில் வைத்து தத் எடுத்துச் சென்றது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. அக்காணொளியின் துணையுடன் ஹேமந்த் தத்தைக் காவல்துறை கைதுசெய்தது.