லக்னோ: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தூய்மையாக இல்லாதது சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, துணை ஆட்சியர் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் அங்கு இருந்தவர்களை அதிர வைத்தது.
அவர் துணை ஆட்சியராக அன்றுதான் பொறுப்பேற்றார் என்பது கவனிக்கத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் துணை ஆட்சியராக செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) பொறுப்பேற்றார் ரிங்கு சிங் ரஹி.
ஐஏஎஸ் அதிகாரியாக இவர் பொறுப்புகளை ஏற்பதற்கு முன்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தூய்மையாக இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பல இடங்களில் குப்பைகள் இருப்பதையும் அலுவலகச் சுற்றுச்சூழலைப் பலர் இயற்கை உபாதைகளைக் கழிக்கப் பயன்படுத்தி இருப்பதையும் கண்ட அவர், அதிகாரியிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
மேலும், ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரை வழக்கறிஞர் அலுவலக ஊழியர் ஒருவர் இயற்கை உபாதைக்குப் பயன்படுத்தியதைப் பார்த்து கடும் கோபம் அடைந்த துணை ஆட்சியர் ரிங்கு சிங், அந்த ஊழியரை அழைத்து தோப்புக்கரணம் போடும்படிப் பணித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி வழக்கறிஞர்கள், ஊழியருக்கு அளிக்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார் துணை ஆட்சியர். ஆனால் வழக்கறிஞர்களோ, ‘ஒட்டுமொத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சுத்தமின்றிக் காணப்படுவதற்கு ஆட்சியர் பொறுப்பேற்று தோப்புக்கரணம் போடுவாரா?’ எனக் கேள்வி எழுப்ப, ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அதிகாரி ரிங்கு சிங் சற்றும் தயங்காமல் அனைவர் முன்னிலையிலும் தோப்புக்கரணம் போட்டார்.
மேலும், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைகளுக்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.
அவரது இந்த அதிரடிச் செயலை எதிர்பார்க்காத வழக்கறிஞர்கள், உடனடியாக தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு திரு ரிங்கு சிங்கிடம் வருத்தம் தெரிவித்து கலைந்து சென்றனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு சிலர் ரிங்கு சிங்மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் மீது ஏழு குண்டுகள் பாய்ந்தன. அவற்றுள் இரு குண்டுகள் முகத்தை தாக்கியதில் ஒரு கண்ணில் பார்வையையும் ஒரு காதில் கேட்கும் திறனையும் அவர் இழந்தார்.