பிராட்டிஸ்லாவா: இந்திய-சுலோவாக்கிய உறவு புதிய உயரத்தை எட்டும் எனத் தாம் நம்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விண்வெளித்துறையில் முன் எப்போதும் இல்லாத வேகத்தில் இந்தியா சில புதிய உயரங்களைத் தொட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வளர்ச்சியில் சுலோவாக்கிய நிறுவனங்களும் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, ஸ்லோவாக்கியா சென்றடைந்த இந்தியப் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அந்நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிகோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்லோவாக்கியப் பிரதமர் இந்தியாவின் உண்மையான நண்பர் என்றார்.
இருதரப்பு வர்த்தகம், பொருளியல் ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மனநிறைவு அளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ரயில்வே, அதிநவீன உற்பத்தி, பசுமை எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பும் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இரு நாட்டு மக்களும் பலன்பெறும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெற முக்கியக் காரணமாக இருந்த சுலோவாக்கியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் திரு மோடி குறிப்பிட்டார்.
புதுத் தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் பலன் பெறுவதற்கேற்ப அந்த ஒப்பந்தம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.
மின்னிலக்கத் தொழில்நுட்பம் தொடர்பாக, தமது இந்தப் பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தம் பல புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் சுலோவாக்கியப் பல்கலைக்கழகத்தில் ‘ஏஐ’ குறித்து இந்தியா இருக்கை ஒன்றை ஏற்படுத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சுலோவாக்கியாவுக்கு வருகைதந்த முதல் இந்தியப் பிரதமரான மோடிக்கு அந்நாட்டின் ‘ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ என்ற ஆகப்பெரிய விருது வழங்கப்பட்டது.

