புதுடெல்லி: அல் ஃபலா பல்கலைக்கழகத்துக்கு வெறும் 900 மீட்டர் தொலையில் நிலத்தடியில் மதரசா பள்ளி ஒன்று அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
டெல்லி செங்கோட்டை வெடிப்பு தொடர்பில் அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. அல் ஃபலா பல்கலைக்கழகத்துக்கும் டெல்லி வெடிப்புக்கும் பயங்கரவாதத் தொடர்பு ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவரும் நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
ஃபரிதாபாத்தில் உள்ள தாவ்ஜ் எனும் கிராமத்துக்கு அருகே இந்த மதரசா அமைந்துள்ளது. 4,000 முதல் 5,000 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இந்த மதரசா அமைக்கப்பட்டுள்ள விதம் வழக்கத்துக்கு மாறாக நிலத்துக்கு சுமார் ஏழு அடிகள் ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது. இதுவே, விசாரணை நடத்தும் அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மதரசாவின், சிறிய மூன்று அடிப் பகுதி மட்டும்தான் நிலத்துக்கு மேல் வெளியே தென்படுவதாக என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது. இதன் சுவர்கள் மிகவும் தடிமனாக இருப்பதாகவும் தளங்களைப் போலிருக்கும் அங்கங்கள் இதன் நிலத்தடிப் பகுதி முழுவதும் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வடிவம், வழக்கமாகக் காணப்படும் மதரசாக்களைப் போல் இல்லை என்று விசாரணை நடத்துபவர்கள் கூறுகின்றனர்.
இந்த மதரசா, மாமவுலானா இஷ்டெயாக் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்நபர், செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய உமர் உன்-நாபி என்பவரின் கூட்டாளியான முஸாமில் ஷாக்கீல் என்பவருக்கு ஓர் அறையை முன்னதாக வாடகைக்கு விட்டிருந்தார்.
இம்மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்த செங்கோட்டை வெடிப்பில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.
முஸாமிலிடம் விசாரணை நடத்தியபோது மாமவுலானா இஷ்டெயாக்கின் பெயர் வெளிவந்தது. அதனைத் தொடர்ந் மாமவுலானா இஷ்டெயாக் கைது செய்யப்பட்டார்.

