புதுடெல்லி: இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சு கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், 15 வயதுக்கும் மேற்பட்டோருக்கான வேலையின்மை விகிதம் நவம்பரில் 4.7% குறைந்துள்ளது என்றும் இது கடந்த ஏழு மாதங்களில் இல்லாத சரிவு என்றும் குறிப்பிட்டுள்ளது.
அரசு, தனியார் துறைகளில் ஏற்படுத்தப்பட்ட கிராமப்புற, பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் உயர்ந்ததே இதற்குக் காரணம் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. மேலும், கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 3.9%ஆகக் குறைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழிற்சாலைகள், உரிய கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால் கிராமப்புறங்களில் பொதுவாக வேலையின்மை விகிதம் அதிகமாக இருக்கும். இதனால் வேலை தேடி நகரங்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதன் காரணமாக கிராமப்புற வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, நாட்டின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.5% குறைந்துவிட்டதாகத் தெரிவித்தது. பெண்கள் வேலையின்மை விகிதம் கடந்த அக்டோபர் மாதம் 5.4%ஆக பதிவான நிலையில், அது தற்போது 4.8%ஆகச் சரிந்துள்ளது. இதில் கிராமப்புற பெண்கள் வேலையின்மை விகிதம் 3.4% ஆகவும், நகர்ப்புறப் பெண்கள் விகிதம் 9.3% ஆகவும் பதிவாகியுள்ளன.
இதனிடையே, மத்திய அரசின் மேம்படுத்தப்பட்ட மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 1.80 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ரூ.1.46 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட உள்ளன என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான திட்டங்கள் பத்து மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன என்றும் இது மின்னணு உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்யும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.

