இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் சற்றே குறைந்தது

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் சற்றே குறைந்தது

2 mins read
2ab4e921-5728-4c6b-b4f4-6aabe33a8e5e
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்திருப்பதாக புள்ளியியல் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது. - படம்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7 விழுக்காடாகக் குறைந்தது. அதற்கு முந்திய காலாண்டில் இந்த விகிதமானது 6.9 விழுக்காடாகப் பதிவாகி இருந்தது.

இதுதொடர்பான தகவல்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) வெளியிட்டது.

அதில் இடம்பெற்றுள்ள தரவுகள் அனைத்தும் காலாண்டு அடிப்படையிலான தொழிலாளர் கணக்கெடுப்பு முறையில் சேகரிக்கப்பட்டவை என்று அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம் 6.9 விழுக்காடாக இருந்தது. இதே காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 4 விழுக்காடாகப் பதிவானது.

முந்திய ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அந்த விகிதமானது 4.4 விழுக்காடாக இருந்தது.

இதன்மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்திருப்பதாக புள்ளியியல் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், கடந்த 2025 அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலாண்டில் நகர்ப்புறங்களில் சுயதொழில் மேற்கொள்வோர் விகிதம் 63.2 விழுக்காடாகப் பதிவானது என்றும் கடந்த 2024ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் அவ்விகிதம் 62.8 விழுக்காடாக இருந்தது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதேபோல் கிராமப்புறங்களில் சுயதொழில் மேற்கொள்வோர் விகிதம் 39.7 விழுக்காடாக பதிவான நிலையில், அவ்விகிதம் அதற்கு முந்தைய ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டில் 39.3 விழுக்காடாக இருந்தது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் வேலைசெய்தோரில் 58.5 விழுக்காட்டினர் வேளாண்துறையில் இருந்தனர்.

2025 மூன்றாம் காலாண்டில் அவ்விகிதம் 57.7 விழுக்காடாக இருந்தது.

2025 மூன்றாம் காலாண்டில் இந்தியாவில் சராசரியாக 56.2 கோடிப் பேர் வேலையில் இருந்தனர். அவர்களில் 39.6 கோடிப் பேர் ஆண்கள், 16.6 கோடிப் பேர் பெண்கள்.

இந்த எண்ணிக்கை 2025 இறுதிக் காலாண்டில் 57.4 கோடிப் பேராக அதிகரித்தது. அவர்களில் 40.2 கோடிப் பேர் ஆண்கள், 17.2 கோடிப் பேர் பெண்கள்.

நாடு முழுவதும் 561,108 பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தக் காலாண்டு மதிப்பீடுகள் அமைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்