கோல்கத்தா: குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையைப் பின்பற்றி மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இதற்கென ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அதை சட்டப்பேரவையில் நான் விளக்குவேன். ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையைப் பின்பற்றி பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்,” என்றார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய அரசில் ஊழலும், வாரிசு அரசியலும்தான் மேற்கு வங்கத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டன. இதன் காரணமாக மாநிலம் பின்தங்கிய நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திரர் போன்ற ஆளுமைகளின் பாரம்பரியத்தை முன்னிறுத்துவது அவர்களின் செயல்திட்டமாக இருக்கவில்லை.
இப்போது ஒரு தேசியவாத அரசு ஆட்சியில் உள்ளது. எனவே, இத்தகைய பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும். இந்த ஆண்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டாகும். இதற்காக பட்ஜெட்டில் ஒரு முக்கிய முன்னெடுப்பை நாங்கள் அறிவித்துள்ளோம். வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டைக் குறிக்கும் வகையில், தேசிய அளவிலான அரும்பொருளகம் ஒன்றை அமைப்பது குறித்து அறிவிக்க உள்ளோம்,” என தெரிவித்தார்.
நம் நாட்டில் பொது சிவில் சட்டம் தற்போது கோவா, உத்தராகண்ட், குஜராத், அசாம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகாரபூர்வமாக நடைமுறையில் உள்ளது அல்லது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. இதில் சில மாநிலங்கள் ஏற்கெனவே சட்டத்தை அமல்படுத்தி விட்ட நிலையில், மற்றவை அதற்கான இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிராவிலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

