புதுடெல்லி: நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 30) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குறிப்பாக, மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும் என்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
“காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அது எப்போதும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்தே வந்துள்ளது. மறைந்த மன்மோகன் சிங், சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை அமைச்சரவையில் பரிசீலிக்க வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு வலியுறுத்தினார்.
“காங்கிரசும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஓர் அரசியல் கருவியாக மட்டுமே கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன. சில மாநிலங்கள் இதைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் இருந்து மட்டுமே இக்கணக்கெடுப்புகளை நடத்தின,” என்றார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.