புதுடெல்லி: நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய அமைச்சரவை மாற்றம் செப்டம்பர் 5 அல்லது 6ஆம் தேதிகளில் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும்போது, வயதில் மூத்தவர்களின் பொறுப்புகளைக் குறைத்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
“அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சந்திப்போம்,” என்று அக்கூட்டத்தில் பேசிய திரு மோடி கூறியதாகத் தெரிகிறது.
செப்டம்பர் 5 அல்லது 6ஆம் தேதி மாற்றம் அறிவிக்கப்படலாம். இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் 24 இளைஞர்கள், அதிக பெண்களுக்கு வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட 12 மத்திய அமைச்சர்கள் உட்பட 81 வயதான ஜிதன் ராம் மாஞ்சி போன்ற மூத்த தலைவர்கள் அமைச்சரவையில் உள்ளனர். அவர்களில் பலரை நீக்கி, அவர்களுக்குக் கட்சிப் பணிகளை வழங்கவும், செயல்திறன் அடிப்படையில் பின்தங்கியவர்களை மாற்றவும் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே தர்மேந்திர பிரதான், ஜார்ஜ் குரியன், ரவ்னீத் சிங் பிட்டு ஆகிய மூவரும் பதவி விலகியுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் புதிய அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது.
திரிணாமுல் காங்கிரசிலிருந்து பிரிந்த 20 எம்பிக்கள் கொண்ட குழு, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூடுதல் இடங்களைக் கோரி வருகின்றன. சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலேவின் பெயரும் பரிந்துரையில் அடிபடுகிறது.
அடைப்படை விதிகளின்படி பிரதமருடன் சேர்த்து அமைச்சரவையின் அதிகபட்ச எண்ணிக்கை 81 ஆக இருக்கலாம். தற்போது 69 உறுப்பினர்கள் மட்டுமே பொறுப்பில் உள்ளதால், கூடுதலாக 12 புதிய அமைச்சர்களை நியமிக்க வாய்ப்புள்ளது.
வரவிருக்கும் மாநில, சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு மாநில அளவிலான பிரதிநிதித்துவத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


