லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
அங்கு ஆண்டுக்கு ஏறக்குறைய 100 ஏவுகணைகள் தயாராகும் என்று கூறப்படுகிறது.
லக்னோவில் நிறுவப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தில் சூப்பர்சோனிக் பிரம்மோஸ் க்ரூஸ் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.
பிரம்மோஸ் என்பது தரை, கடல், வான் பரப்பிலிருந்து ஏவக்கூடிய, துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணை.
இது பகல், இரவு மட்டுமின்றி அனைத்து வானிலை சூழலிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலை ஆண்டுக்கு 80 முதல் 100 பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது. இது வருங்காலத்தில் 100 முதல் 150 ஏவுகணைகள்வரை தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.
80 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.300 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் தயாராகும் ஏவுகணைகள் 290 முதல் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை, மணிக்கு 3,430 கி.மீ. வேகத்தில் சென்று தாக்கும் திறன் பெற்றவை.