இந்தியாவில் மருத்துவர்களுக்குத் தனித்துவ அடையாள எண்

இந்தியாவில் மருத்துவர்களுக்குத் தனித்துவ அடையாள எண்

2 mins read
8cd538fe-d390-4470-916c-f4b1d0884b71
இனி கண்காணிப்பு நடவடிக்கை எளிதாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ளப்படும் என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். - சித்திரிப்புப் படம்: எக்கானமிக் டைம்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்குவதற்கான புதிய வரைவு விதிகளைத் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் மருத்துவர்களால் வேலை பார்க்க முடியும். பணி நிமித்தம் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது அங்கெல்லாம் மீண்டும் தங்கள் பெயரைத் தனியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இனி இருக்காது.

இதுதொடர்பாக மருத்துவர்கள் பதிவு, ‘மருத்துவ உரிமத் திருத்த விதிமுறைகள்-2026’ என்ற தலைப்பில் வரைவு அறிக்கை ஒன்றை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய விதிமுறைகளின்படி, ஒரு மருத்துவர் மாநில மருத்துவ மன்றத்தில் (கவுன்சில்) தனது பெயரைப் பதிவு செய்தவுடன், தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிசார் வாரியம் மூலம் அவருக்கெனச் சிறப்பு ‘தனித்துவ அடையாள எண்’ உருவாக்கப்படும் என்றும் பிறகு நாட்டின் எந்தவொரு மாநிலத்திலோ யூனியன் பிரதேசத்திலோ சேவை செய்ய மீண்டும் தனியாகப் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் இந்தியா முழுவதும் தடையின்றி மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ள இந்தப் புதிய விதிமுறை வழிவகை செய்கிறது. மருத்துவர்களுக்கு வழங்கப்படும் அடையாள எண்கள், குறிப்பிட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் குறியீடு, அம்மாநில மருத்துவக் கவுன்சில் பதிவு எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய தனித்துவ அடையாள எண் முறை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், ஒரு மருத்துவருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது மாநிலப் பதிவேடு, தேசியப் பதிவேடு ஆகிய இரண்டிலும் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும். இதனால் முறைகேடுகள் தடுக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காணிப்பு எளிதாகும்:

தற்போது நடைமுறையிலுள்ள அமைப்பில், மாநில மருத்துவக் கவுன்சில்களுக்கும் தேசிய அளவிலான தரவுத்தளத்திற்கும் இடையே நேரடி ஒருங்கிணைப்பு இல்லை. இதனால், ஒரு மாநிலத்தில் ஒழுங்கு நடவடிக்கை அல்லது தடையைச் சந்திக்கும் மருத்துவர், வேறு மாநிலத்திற்குச் சென்று முறைகேடாகப் பயிற்சி செய்வதைக் கண்காணிப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வந்தது.

இனி கண்காணிப்பு நடவடிக்கை எளிதாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ளப்படும் என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மருத்துவர்அடையாளம்ஆணையம்