புதுடெல்லி: பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகளையடுத்து, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் இந்தியாவிடமிருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையை பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரிக்கின்றன. நிலப்பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், கடல், வானில் இருந்தும் இந்த ஏவுகணையைப் பாய்ச்ச முடியும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகளைத்தான் அதிகம் பயன்படுத்தியது.
பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள், பயங்கரவாத முகாம்கள் அந்த ஏவுகணைகளைக் கொண்டு துல்லியமான தாக்குதலை நடத்தின. இதையடுத்து, பிரம்மோஸ் ஏவுகணைக்கு உலகளாவிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கு போரையடுத்து ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் இந்தியாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் அண்மைக் காலமாக மேம்பட்டு வருகின்றன.
எரிசக்தி, ராணுவத் தளவாடங்களை இணைந்து தயாரிப்பது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே அண்மையில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
முன்னதாக, 2022ஆம் ஆண்டு 375 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்க டாலருக்கு பிரம்மோஸ் ஏவுகணை வாங்க இந்தியாவுடன் பிலிப்பீன்ஸ் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, உரிய காலத்தில் பிரம்மோஸ், அகஸ்தீர் நான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா ஒப்படைத்தது.

