டெல்லி: ஐக்கிய அரபு சிற்றரசுகளில் வெவ்வேறு கொலை வழக்குகளில் கைதான ஒரு பெண் உட்பட மூன்று இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது ஷஸாதி கான் என்ற பெண், அபுதாபியில் தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரின் 4 மாதக் குழந்தையைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிப்ரவரி 15ஆம் தேதி ஷஸாதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஷஸாதியின் உடல் அவரது பெற்றோரின் முன்னிலையில் அபுதாபியில் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த முகம்மது ரினாஷ், ஐக்கிய அரபு சிற்றரசைச் சேர்ந்தவரை கொலை செய்ததாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல் மற்றொரு வழக்கில் கேரளாவைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் இந்தியர் ஒருவரைக் கொலை செய்ததாகக் கடந்த 2009ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இருவருக்கும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் 54 இந்தியர்கள் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். அவர்களில் 29 பேர் ஐக்கிய அரபு சிற்றரசுகளில் தண்டனை பெற்றவர்கள்.