வாஷிங்டன்: தைவானுக்கு 385 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 515 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ராணுவ உதிரி பாகங்களை விற்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.
தைவான் அதிபர் லாய் சிங்-தே தனது அதிகாரத்துவ பசிபிக் பயணத்தைத் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு இந்த ஒப்புதலை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டனுக்கும் தைவானுக்கும் இடையே முறையான ராஜதந்திர உறவுகள் இல்லாவிட்டாலும், தைவானை தனது என உரிமைகோரும் சீனாவிடமிருந்து அந்நாடு தன்னைத் தற்காத்துக் கொள்வதற்குத் தேவையானவற்றை வழங்குவதற்கு அமெரிக்கா சட்டப்படி கடமைப்பட்டுள்ளது.
தைவான் சீனாவின் ஓர் அங்கம் என்கிறது பெய்ஜிங். ஆனால் தைவான் சீனாவின் உரிமைகோரலை நிராகரிக்கிறது.
அண்மை காலமாக தைவான் மீதான ராணுவ, அரசியல் நெருக்குதலையும் சீனா அதிகரித்து வருவது குறிப்படத்தக்கது.
எஃப்-16 போர் விமானங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் மின்னிலக்க முறையில் வருடும் ரேடார் கருவிகள் ஆகியவற்றை 385 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளதாக அமெரிக்காவின் முக்கிய தற்காப்பு ஒத்துழைப்புக்கான நிறுவனம் நிறுவனம் கூறியது.