புதுடெல்லி: அமெரிக்காவில் நிதி மோசடி செய்த இந்தியரான சந்தோக் என்பவரை அந்நாடு நாடு கடத்தியது.
அமெரிக்காவில் மூத்தோரைக் குறி வைத்து, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடி நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல போலி நிறுவனங்களை உருவாக்கி சந்தோக் நிதி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீப்பளிக்கப்பட்ட சந்தோக்குக்கு ஆறு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அமெரிக்காவிலிருந்து சந்தோக்கை நாடு கடத்த இந்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீண்ட சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்தியாவில் நிதி மோசடி செய்த சந்தோக் அமெரிக்கா தப்பியோடியதாகவும் அதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அவரைத் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்தியத் தரப்பில் அமெரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டது.
பலமுறை விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமெரிக்கா தற்போதுதான் செவி சாய்த்துள்ளது.
இந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் அவரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர், சந்தோக் செய்த மோசடிகுறித்து முழு விபரம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.