புதுடெல்லி: போதைப் பொருள்களைக் கடத்தக்கூடிய, அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய நாடுகளின் பட்டியலில், இந்தியாவையும் சேர்த்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகக் கருதப்படும் 23 நாடுகளைக் கொண்ட பட்டியலை அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளது. இதில், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
ஏற்கெனவே அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, போதைப் பொருள் விவகாரத்திலும் அதன் பெயரை அமெரிக்கா பயன்படுத்தியிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பொலிவியா, மியன்மார், கொலம்பியா, கோஸ்டாரிக்கா, டொமினிக்கன் குடியரசு, எக்குவடோர், எல் சல்வடோர், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியன்மார், கொலம்பியா, வெனிசுலா ஆகிய ஐந்து நாடுகள் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதில் தோல்வியடைந்து விட்டதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள், சட்டவிரோதப் போதைப் பொருள்களை அமெரிக்காவிற்குள் கொண்டு செல்வதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என வெள்ளை மாளிகை கூறியது.
அமெரிக்காவின் பட்டியலில் இருப்பதால், அக்குறிப்பிட்ட நாட்டின் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளையோ அல்லது அமெரிக்காவுடனான ஒத்துழைப்பின் அளவையோ, அது பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்று வெளியுறவு அமைச்சு தெளிவுபடுத்தி உள்ளது.
இதன் காரணமாகவே, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் போதைப் பொருள் கடத்தல், உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
போதைப் பொருள் கடத்தல் உபகரணங்கள், வேதிப்பொருள்கள் ஆகியவற்றின் முக்கிய ஆதாரங்களாக இந்தியாவும் சீனாவும் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானம் மூலம் இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் கூர்மையாக அதிகரித்து வருவதாகவும் சட்டவிரோத மருந்துகள், முன்னோடி வேதிப்பொருள்கள் தயாரித்து கடத்துவதன் மூலம், அவ்விரு நாடுகளும் அமெரிக்கா, அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
சீன அரசாங்கம், ரசாயன விநியோகத்தைக் குறைப்பதற்கும் இதனுடன் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

