ஆஸ்டின்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், ஆஸ்டின் நகரில் பொதுப் பேருந்தில் இந்திய ஆடவர் ஒருவரை இன்னோர் இந்திய ஆடவர் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார்.
அக்ஷய் குப்தா என்ற 30 வயது ஆடவர் இம்மாதம் 14ஆம் தேதி மாலை பொதுப் பேருந்தில் சென்றுகொண்டிருந்ததாக ஆஸ்டின் காவல்துறை தெரிவித்தது.
பேருந்தில் பயணி ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளானதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல்துறை அதிகாரிகளும் அவசர மருத்துவ சேவைப் பிரிவினரும் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.
அங்கு குப்தா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
குப்தாவின் உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றும் சம்பவ இடத்திலேயே அவர் மாண்டுவிட்டார் என்றும் காவல்துறை குறிப்பிட்டது. குப்தாவைக் கத்தியால் குத்தியவர் 31 வயது தீபக் கந்தேல் என அடையாளம் காணப்பட்டது.
பேருந்துப் பயணத்தின்போது குப்தாவிற்கு அருகில் கந்தேல் அமர்ந்திருந்தார் என்றும் குப்தா எதுவும் செய்யாதபோதும் கந்தேல் அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார் என்றும் கூறப்பட்டது.
பேருந்து நின்றதும் மற்ற பயணிகளுடன் கந்தேல் அமைதியாக வெளியேறிவிட்டார்.
ஆயினும், சிறிது நேரத்திற்குள் காவல்துறை அதிகாரிகள் கந்தேலை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
குப்தாவைக் கொன்றதை ஒப்புக்கொண்ட கந்தேல், ‘அவர் தமது உறவினர்போல் இருந்ததால்’ கத்தியால் குத்தியதாகக் கூறினார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கந்தேல்மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கந்தேல் இதற்கு முன்னரும் பலமுறை கைதுசெய்யப்பட்டுள்ளபோதும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டதில்லை என்று ஆஸ்டின் காவல்துறை தெரிவித்தது.
குப்தா வளர்ந்துவரும் தொழில்முனைவர் எனக் கூறப்பட்டது. மூத்த குடிமக்களின் நடமாட்டத்திற்கு உதவும் ‘ஃபூட்பிட்’ எனும் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
தமது கண்டுபிடிப்பிற்காக மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா, குப்தாவிற்குத் தனிப்பட்ட வகையில் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.