தேர்வு முடிந்த 10 நிமிடங்களிலேயே முடிவுகளை அறிவித்த பல்கலைக்கழகம்

தேர்வு முடிந்த 10 நிமிடங்களிலேயே முடிவுகளை அறிவித்த பல்கலைக்கழகம்

2 mins read
1ad9b642-eb35-4769-be9f-0483df2cea95
தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விகிதம் 99.98 விழுக்காடாக இருந்தது. - படம்: விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

பெங்களூரு: தேர்வு மதிப்பீட்டுச் செயல்பாட்டில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (விடியு) ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று (மே 22) தேர்வு முடிந்த 10 நிமிடங்களுக்குள் இறுதி அரையாண்டு பொறியியல் பட்டப் படிப்புத் தேர்வு முடிவுகளை அறிவித்தது.

மொத்தம் 56,192 மாணவர்கள் தேர்வெழுதினர். செய்முறைத் தேர்வுகள் மாலை 5.30 மணிக்கு முடிவடைந்த நிலையில், முடிவுகள் மாலை 5.40 மணிக்குள் அறிவிக்கப்பட்டன. மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 99.98 விழுக்காடாக இருந்தது. துணைவேந்தர் எஸ். வித்யாசங்கரும் பதிவாளர் (மதிப்பீடு) யு.ஜே. உஜ்வலும் கூட்டாகத் தேர்வு முடிவுகளை வெளியிட்டனர்.

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 220 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் மே மாதத்தின் முதல் வாரத்திலிருந்து நடத்தப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது. எழுத்துத்தேர்வு விடைத்தாள்கள் முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டு மின்னிலக்க முறையில் சேமிக்கப்பட்டிருந்தன.

செய்முறைத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றன. தேர்வுகள் முடிந்த ஐந்து நிமிடங்களுக்குள் மதிப்பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. பத்து நிமிடங்களுக்குள் முடிவுகள் தொகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.

தேர்வு, மதிப்பீட்டு முறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தங்களது கல்வி நிலையம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகப் பேராசிரியர் வித்யாசங்கர் கூறினார்.

“தேர்வு முடிந்த 10 நிமிடங்களுக்குள் முடிவுகளை அறிவிப்பது எளிதான பணியன்று. இறுதியாண்டு மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்காக முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருப்பர். அதனால், எந்தத் தாமதமும் ஏற்படாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்பினோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்கள்துணைவேந்தர்பேராசிரியர்தேர்வு