ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோத்பூரில் உள்ள எம்பிஎம் பொறியியல் பல்கலைக்கழக மாணவர்கள் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 120 மதிப்பெண்கள் வரை பெற்றதால் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பல்கலை நிர்வாகம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இது அரசாங்க விசாரணைக்கும் மாணவர் போராட்டங்களுக்கும் வழிவகுத்தது.
பல்கலைக்கழக இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட முடிவுகள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
பல மாணவர்கள் வெளிப்படையாகத் தெரியும் பிழை குறித்து சுட்டிக்காட்டியபோது, நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்காமல் முடிவுகளை நீக்க முயன்றது.
எம்பிஎம் பல்கலைக்கழகம் அதன் முடிவுகளைத் தவறாக வெளியிட்டிருப்பது இது முதல் முறை அல்ல என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“அதிக மதிப்பெண்கள் வழங்கியிருப்பதன் மூலம் நிர்வாகம் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது,” என்று ஒரு மாணவர் கூறினார்.
முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதற்கு முன்பு எந்த சரிபார்ப்பும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தவறு முற்றிலும் நிர்வாகத்தின் தரப்பில் இருந்தபோதிலும், பல மாணவர்கள் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்களுக்காக அதிகாரிகளை நாடும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தேர்வு நிறுவனம் சோதனைகளை மேற்கொண்டபோது, துணைவேந்தர் பேராசிரியர் அஜய் சர்மா தங்களது பிழையை ஒப்புக்கொண்டார்.
“பிழை கவனத்துக்கு வந்தவுடன் முடிவுகள் உடனடியாக நீக்கப்பட்டன,” என்று சர்மா கூறினார்.
இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய தேசிய மாணவர் சங்கமும் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது. ஜோத்பூர் மாவட்டத் தலைவர் டாக்டர் பப்லு சோலங்கி தலைமையில், மாணவர் தலைவர்கள் துணைவேந்தரிடம் மூன்று நாட்களுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு குறிப்பாணையைச் சமர்ப்பித்தனர்.
“இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, அலட்சியமான செயல்,” என்று டாக்டர் சோலங்கி கூறினார். “சரிபார்க்காமல் முடிவுகளை எவ்வாறு பதிவேற்ற முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியதாக இந்தியா டுடே ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அறிக்கை கோருவதும், மாணவர் போராட்டங்கள் வலுவடைந்தும் வருகின்றன. இப்போது அனைவரது பார்வையும் எம்பிஎம் பல்கலைக்கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையின் மீது உள்ளது.