ஹைதராபாத்: தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்காகப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலப்பகுதியை ஏலம் விடுவதாக தெலுங்கானா மாநில அரசு முடிவுசெய்துள்ளதற்கு எதிரான ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மாணவர்கள் செவ்வாய்க்கிழமைமுதல் (ஏப்ரல் 1) கால வரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“தெலுங்கானா தொழில்துறை உள்கட்டமைப்புக் கழகத்தின் வனப்பகுதி அழிப்பை எதிர்த்துப் போராட, காவல்துறை எங்களை வெளியேவிட அனுமதிக்க மறுக்கின்றனர். நூற்றுக்கணக்கான தாவர, விலங்கினங்களின் இல்லமாக காஞ்சா கச்சிபௌலி திகழ்கிறது. தொழில்துறை உள்கட்டமைப்புக் கழகத்தின் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து காவல்துறையினர் வெளியேற வேண்டும். வனப்பகுதி அழிப்பு நிறுத்தப்படும்வரை வகுப்புகளுக்குச் செல்ல மாட்டோம்,” என்று ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆகாஷ் குமார் தெரிவித்தார்.
மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள காஞ்சா கச்சிபௌலியில் 734 தாவர இனங்கள், 220 பறவையினங்கள், அருகிவரும் உயிரினமான இந்திய நட்சத்திர ஆமை உள்ளிட்ட விலங்கினங்கள் போன்றவை இருப்பதாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.
போராடிய மாணவர்களில் 55 பேரை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்த காவல்துறை, பின்னர் அவர்களில் 53 பேரை விடுவித்துவிட்டதாகவும் இருவரைக் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளதாகவும் மாணவர்கள் தரப்பு கூறியது.
முன்னதாக, காஞ்சா கச்சிபௌலி சிற்றூரில் உள்ள 400 ஏக்கர் நிலத்திற்கு அரசே முழு உரிமையாளர் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகளின் துணையுடன் 2024 ஜூலை 19ஆம் தேதி அங்கு நில அளவைப் பணிகள் நடத்தப்பட்டன என்றும் திங்கட்கிழமை தெலுங்கானா அரசு தெரிவித்தது.
மாணவர்களின் போராட்டத்திற்கு பாரதிய ராஷ்டிரிய சமிதி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு உடனடியாக காடு அழிப்பைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, காஞ்சா கச்சிபௌலியில் திட்டமிட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளால் ரூ.50,000 கோடி வரையில் முதலீடு செய்யப்படும் என்றும் 500,000 பேருக்குவரை வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.