முடிவுக்கு வந்தது பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

2 mins read
f13760e9-7f23-48d6-8c90-80caade82d79
ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் வெளியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் மாணவர்கள், அதன் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். - படம்: பிடிஐ

ஹைதராபாத்: பல்கலைக்கழகத்தை ஒட்டி அமைந்துள்ள 400 ஏக்கர் நில மேம்பாடு தொடர்பான விவகாரத்தில் அடுத்த உத்தரவு வரும்வரை எந்தப் பணிகளையும் மேற்கொள்ள தெலுங்கானா மாநில அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனையடுத்து, தங்களுடைய காலவரம்பற்ற வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் கைவிட்டனர். வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பியதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆகாஷ் குமார் தெரிவித்தார்.

அந்த மத்திய பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள காஞ்சா கச்சிபௌலி எனும் சிற்றூரிலுள்ள 400 ஏக்கர் வனப்பகுதியை அழித்து, அங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க தெலுங்கானா அரசு முடிவுசெய்தது.

ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கால வரையறையற்ற போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தை ஒட்டி அமைந்துள்ள பரந்த வனப்பகுதியை அவசர அவசரமாக அழிக்க வேண்டிய காரணம் குறித்து விளக்கமளிக்கும்படி வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் தெலுங்கானா அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை அங்கு மேற்கொண்டு எந்தப் பணியையும் மேற்கொள்ளவும் அது தடைவிதித்தது.

அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகக் குழு, சமூகக் குழுக்கள், மாணவர்கள், இதர பங்காளிகள் ஆகியோருடன் கலந்துரையாடி, சுமுகமான தீர்வை எட்டுவதற்காக அமைச்சர்நிலைக் குழு ஒன்றை அமைக்க மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பல்கலைக்கழக மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.

அந்த 400 ஏக்கர் நிலமும் பல்கலைக்கழகத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாணவர் சங்கத் தலைவர் உமேஷ் அம்பேத்கர், அதனை ஏலம் விடும் முடிவை அரசு கைவிடும்வரை தாங்கள் ஓயமாட்டோம் என்றும் கூறினார்.

மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் வெளியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் மாணவர்கள், அதன் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்