புதுடெல்லி: இந்தியாவையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரைப் பிணையில் விடுவிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்றம் செங்கருக்குப் பிணை வழங்கியிருந்தது.
அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்க டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் கே.கே. மகேஸ்வரி, ஏ.ஜே. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை (டிசம்பர் 29) விசாரித்தது.
செங்கர் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, விசாரணையை ஜனவரி கடைசி வாரத்திற்குத் தள்ளிவைத்தது.
சிபிஐ தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, “குழந்தையைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரமான வழக்கு இது. போக்சோ சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன,” என்றார்.
வன்கொடுமைக்கு ஆளானபோது அச்சிறுமிக்கு 16 வயதுகூட நிரம்பவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
குற்றமிழைத்தபோது செங்கர் அரசுப் பதவியில் இருந்தார் என்றும் அவருக்குக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்றும் திரு மேத்தா வாதிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, செங்கரைப் பிணையில் விடுவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதைப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வரவேற்றார்.
“உச்ச நீதிமன்ற உத்தரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பதே என் விருப்பம்,” என்று அவர் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பில், 2019 டிசம்பரில் செங்கருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் ஏற்கெனவே ஏழாண்டுகளையும் ஐந்து மாதங்களையும் சிறையில் கழித்துவிட்டதாகக் கூறி அண்மையில் டெல்லி உயர் நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

