பாட்னா: பீகார் தேர்தலில் வரலாறு காணாத எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பதைத் தொடர்ந்து இந்நிலை உருவானது.
இவ்வாண்டு பீகார் தேர்தலில் 75 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்ததாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) தெரிவித்தார். இந்தத் தேர்தல், இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று அவர் கருத்துரைத்தார்.
வாக்களிப்பின் இரு கட்டங்களிலும் மொத்தம் 66.9 விழுக்காட்டினர் வாக்களித்ததாக திரு கியானேஷ் குமார் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை வெளியான தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளின்படி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மறுபடியும் பீகாரில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஜனதா தளக் கட்சி இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாகத்பந்தன், 243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுக்குச் சற்று குறைவாகப் பெறும் என்று அந்தக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
மேலும், பிரசாந்த் கிஷோரின் தலைமையிலான ஜான் சுராஜ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறாது என்று கருத்துக் கணிப்புகளில் கணிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி முதன்முறையாக தேர்தலில் களமிறங்குகிறது.
எனினும், அண்மைக் காலமாக கருத்துக் கணிப்புகளில் வெளியான முடிவுகள் யதார்த்தத்துக்கு மாறுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பீகார் தேர்தலின் முதற்கட்ட வாக்களிப்பு கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 6) நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

