மும்பை: மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் ஒரே இரவில் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழைக் கொட்டித்தீர்த்ததில், அங்குச் சாலைப் போக்குவரத்து நிலைகுத்தியது. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே, மும்பை மாநகருக்கு வியாழக்கிழமை காலை வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) இரவு மும்பையில் பெய்யத் தொடங்கிய மழை, விடிய விடியக் கொட்டித்தீர்த்தது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, முந்தைய 24 மணிநேரத்தில் 248 மில்லிமீட்டர் மழை பதிவானது. இது கடந்த பத்து ஆண்டுகளில் மும்பை மாநகரம் காணாத மழைப்பொழிவாகும்.
செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய மழை, இரவு மேலும் வலுவடைந்ததாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
புதன்கிழமை (ஜூன் 24) மாநகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்த சாலைகள், கடுமையான போக்குவரத்து நெரிசல்கள், தடைபட்ட ரயில் சேவைகளுடன் மும்பை மக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.
வியாழக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யவும் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) நாள் முழுவதும் மும்பையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை புறநகர் வானிலை ஆய்வு நிலையத்தில் 8.9 மில்லி மீட்டர் மழையும் கொலாபாக் கடலோர வானிலை ஆய்வு நிலையம் அமைந்துள்ள பகுதியில் 36 மில்லிமீட்டர் மழையும் பதிவாயின.
தென் மும்பையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஜூன் மாதம் ஆக அதிக மழை பெய்த நாளாகச் செவ்வாய்க்கிழமை பதிவானது.
கனமழை காரணமாக அந்தேரி சுரங்கப்பாதை, ஹிந்த்மாதா சந்திப்பு, தாதர், காந்தி சந்தை, மலாடு சுரங்கப்பாதை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளநீரை அகற்ற மும்பை மாநகராட்சி நிர்வாகம் நீர் வெளியேற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தியது.
இரவு முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டதால், காலை 5.30 மணிக்குள் போக்குவரத்துக்காகப் பெரும்பாலான சாலைகள் திறக்கப்பட்டதாக மாநகர நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

