தணியாத கல்வித் தாகம்: 85 வயதில் முதுகலைப் பட்டம்; சாதித்த இந்திய ராணுவ வீரர்

தணியாத கல்வித் தாகம்: 85 வயதில் முதுகலைப் பட்டம்; சாதித்த இந்திய ராணுவ வீரர்

படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

21 Sep 2026 - 6:36 pm

1 mins read

சண்டிகர்: வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயதான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லால் சந்த் கோதாரா.

தளராத மனஉறுதி கொண்ட அம்முதியவர், தனது 85வது வயதில் 1,200 மதிப்பெண்களுக்கு 965 மதிப்பெண்கள் பெற்று இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

1962, 1965, 1971ஆம் ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்ட மூன்று போர்களில் திறம்படப் பணியாற்றிய அவர், தாய்நாட்டுக்கான ராணுவச் சேவையால் தொடர முடியாமல் போன தனது கல்வியை 76 வயதில் 11ஆம் வகுப்பிலிருந்து மீண்டும் தொடர்ந்தார்.

தொடர்ந்து 81 வயதில் இளங்கலைப் பட்டம் பெற்ற லால் சந்த், தற்போது முதுகலைப் பட்டப்படிப்பையும் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இவரது சாதனைகள் படிப்போடு மட்டும் நிற்கவில்லை. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, விளையாட்டுத் துறையிலும் இறங்கிய அவர், பல்வேறு போட்டிகளில் தடகள வீரராகப் பங்கேற்று தேசிய, அனைத்துலக அளவில் ஏறக்குறைய 150 தங்கம், 30 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளார்.

“கல்வி கற்றலுக்கு வயது ஒரு தடையல்ல. கற்றல் என்பது எனது வாழ்நாளின் முக்கியமான இலக்கு,” என்று நம்பிக்கையுடன் கூறும் லால் சந்த் கோதாரா, அடுத்து முனைவர் பட்டம் அல்லது சட்டப்படிப்பை தொடர ஆயத்தமாகி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்