சீரற்ற விமானப் பயணக் கட்டணங்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சீரற்ற விமானப் பயணக் கட்டணங்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 mins read
0102f288-ba0e-4f32-8775-22917895c4d5
விமானப் பயணக் கட்டணங்கள் தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள விதிகளை விளக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. - கோப்புப் படம்: தி இந்து

புதுடெல்லி: இந்திய விமான நிறுவனங்கள் பயணக் கட்டணங்களை சீரான முறையில் நிர்ணயிக்க மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகள் என்னவென்று விளக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்த விதிமுறைகளை முத்திரையிடப்பட்ட உறையில் அடைத்து இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அரசுத் தரப்புக்கு அது உத்தரவிட்டுள்ளது.

பண்டிகைக் காலங்கள், விடுமுறை நாள்கள் மற்றும் அவசர காலங்களில் தனியார் விமான நிறுவனங்கள் விதிக்கும் தன்னிச்சையான விமானக் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை விதிமுறைகளை வகுக்கக் கோரி சமூக ஆர்வலர் எஸ். லட்சுமிநாராயணன் என்பவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.

அவரது மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 2025 நவம்பர் 17ஆம் தேதி நோட்டீஸ் பிறப்பித்தது. மனு மீண்டும் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘கட்டண விவகாரத்தை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது’ என்று மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அடுத்தகட்ட விசாரணை கடந்த மே 15ஆம் தேதி வந்தபோது, “விமானப் பயணக் கட்டணம் சீராக இருக்க வேண்டும்,” என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அப்போது, “விமானப் போக்குவரத்து தொடா்பாக 2024ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய சட்டம் கடந்த 2025 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன,” என்று மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமைச் சட்ட அதிகாரி துஷாா் மேத்தா கூறினார்.

அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் திங்கட்கிழமை (ஜூலை 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞா் ரவீந்திர ஸ்ரீவாஸ்தவா, “மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் வரை, பழைய விதிகளே தொடருவதால் விமானப் பயணக் கட்டணங்களின் சீரற்ற நிலை நீடிக்கிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“சீரான, நியாயமான கட்டண நிர்ணயம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த, தனி அதிகாரம் படைத்த வலுவான மற்றும் பயனுள்ள ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்துவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்