அதிபர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு

அதிபர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு

2 mins read
3fc2fb71-c08b-4d8c-af8c-7cdb8f48c5d0
ராஜாஜி சிலையைத் திறந்து வைத்த இந்திய அதிபர் திரெளபதி முர்மு (வலது), இந்தியத் துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன். - படம்: இந்திய அதிபரின் எக்ஸ் தளம்

புதுடெல்லி: அதிபர் மாளிகையில், சுதந்திர இந்தியாவின் முதலாவது மற்றும் கடைசி இந்தியத் தலைமை ஆளுநர் சி. ராஜகோபாலாச்சாரியின் சிலையை இந்திய அதிபர் திரெளபதி முர்மு திங்கட்கிழமை (பிப்ரவரி 23) திறந்து வைத்தார்.

விடுதலை மற்றும் சுதந்திர இந்தியாவில் ராஜாஜியின் பங்களிப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் ராஜாஜி உத்சவ் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ராஜாஜியின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த கண்காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை அதிபர் மாளிகையில் நடைபெறவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஆங்கிலேயர் புகழ் போற்றும் அடையாளங்கள், சின்னங்கள் மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு, சுதந்திர இந்தியாவில் பெரிதும் பங்களிப்புச் செய்த தலைவர்கள், தியாகிகள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், டெல்லியின் முக்கிய அரசுக் கட்டடங்கள் அமைந்த செளத் பிளாக், நாா்த் பிளாக், அதிபர் மாளிகை உள்ளிட்ட கட்டடங்களைக் கட்டிய பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் எட்வின் லூட்யன் நினைவாக அதிபர் மாளிகையில் இருந்த அவரின் சிலை அகற்றப்பட்டு, அந்த இடத்தில் ராஜாஜி சிலை வைக்கப்பட்டுள்ளது.

அதிபர் மாளிகையில் அசோக மண்டபத்திற்கு அருகிலுள்ள பிரம்மாண்டமான திறந்த படிக்கட்டில் அமைக்கப்பட்ட ராஜாஜியின் மார்பளவு சிலையைத் திரெளபதி முர்மு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியத் துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய திரெளபதி முர்மு, இந்தியாவின் ஆன்மிக மற்றும் சேவை பாரம்பரியத்தை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தும் வகையிலான பணிகளில் ராஜாஜி தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகப் புகழாரம் சூட்டினார்.

குறிப்புச் சொற்கள்