லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மின்சாரத் திறனளவித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, புதிய பூஜ்ஜிய இருப்பு விதியை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, மின்சாரத் திறனளவி மின் பயன்பாட்டுக்கான இருப்புத்தொகை குறைந்தாலும், மின்சார விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட மாட்டாது.
ஆக அதிகமாக, மூன்று நாள்கள் அல்லது இரண்டு கிலோவாட் வரை மின்விநியோகம் நீடிக்கும். அதாவது, ரூ.200 மதிப்புள்ள மின்சாரத்தை நுகர்வோர் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என எரிசக்தித் துறை அமைச்சர் ஏ.கே. சர்மா தெரிவித்தார்.
மேலும், புகார்களுக்குத் தீர்வு காண, 1912 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் புதிய மின்சாரத் திறனளவி பொருத்தும் பணியை நிறுத்தி வைக்கும் முடிவையும் மாநில அரசு எடுத்துள்ளது.
இது தொடர்பான நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழு தனது அறிக்கையை அளிக்கும் என்றும் அதைப் பரிசீலித்து அரசு தனது முடிவை அறிவிக்கும் வரை தற்போதுள்ள நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அண்மையில் மின்சாரத் திறனளவி பொருத்தப்பட்ட வீடுகளுக்கு அமைச்சர் சில சலுகைகளையும் அறிவித்தார்.
மின் விநியோகம் தொடர்பில் சிறந்த தகவல் தொடர்பை உறுதி செய்ய ஏதுவாக, ஐந்து கட்ட குறுஞ்செய்தி எச்சரிக்கை முறை செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி, மின் இருப்பு 30 விழுக்காட்டை எட்டும்போது முதல் எச்சரிக்கையும் 10 விழுக்காடு இருக்கும்போது இரண்டாவது எச்சரிக்கையும் இருப்பு முழுவதுமாகத் தீர்ந்துவிடும்போது மூன்றாவது எச்சரிக்கையும் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு நான்காவது எச்சரிக்கையும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு ஐந்தாவது எச்சரிக்கையும் அனுப்பப்படும். மின் இருப்பு எதிர்மறையாக மாறினாலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் மின் இணைப்புகள் துண்டிக்கப்படாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

