புதுடெல்லி: மின்னிலக்க முறையில் உடனடியாகப் பணமாற்றும் யுபிஐ சேவையில் சனிக்கிழமை தடங்கல் ஏற்பட்டது.
அதனால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் கைப்பேசி வாயிலான யுபிஐ மின்னிலக்க முறை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. கடைகளில் 10 ரூபாய்க்குக் கூட ஜிபே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்துகின்றனர். அந்தச் சேவை அனைத்தும் யுபிஐ மூலம் நடைபெறுகின்றன.
யுபிஐ சேவையில் சனிக்கிழமை (ஏப்ரல் 12) முற்பகல் 11.30 மணியளவில் தடங்கல் ஏற்பட்டது. அதனால், ஏராளமானோர் ஜிபே, ஃபோன்பே, பேடிஎம் செயலிகளைப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
சேவைத் தடங்கல் நிகழ்ந்த அரை மணி நேரத்தில் அதுகுறித்து 1,168 புகார்கள் செய்யப்பட்டன.
அண்மைக்காலமாக இடைவிடாத தொழில்நுட்பச் சிக்கல்களை, தான் சந்தித்து வருவதாக யுபிஐ செயல்பாடுகளை மேற்பார்வையிடும் இந்திய தேசியக் கட்டணக் கழகம் (NPCI) கூறியுள்ளது.
அதனால் ஏற்படும் இடையூறு யுபிஐ பரிவர்த்தனைகளில் ஓரளவு சரிவை ஏற்படுத்துவதை ஒப்புக்கொண்ட அந்த அரசாங்க அமைப்பு, பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுள்ளது.
இதற்கிடையே, தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை ஏராளமானோர் சமூக ஊடகங்களில் வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 20 நாள்களில் யுபிஐ சேவையில் ஏற்பட்டு இருக்கும் மூன்றாவது சேவைத் தடங்கல் இது.
இதற்கு முன்னர் மார்ச் 26, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளிலும் இதுபோன்ற இடையூறுகளை யுபிஐ வாடிக்கையாளர்கள் சந்தித்தனர்.