தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை மருத்துவர் கூறுகிறார்

‘மனநலச் சுகாதாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படலாம்’

2 mins read
bc1b3927-6f02-4e23-aa46-bf34fc3894f5
கோப்புப் படம்: - இணையம்

நியூயார்க்: இந்தியாவும் அமெரிக்காவும் மனநலச் சுகாதாரத்தில் இணைந்து செயல்படலாம் என்று அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை மருத்துவரான விவேக் மூர்த்தி கூறியுள்ளார்.

அதன் மூலம் அவ்விரு நாடுகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் பலனடையும் என்று அவர் கருத்துரைத்தார்.

மனநலச் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதன் தொடர்பிலான முயற்சிகளைத் துரிதப்படுத்தும் நேரம் இது என்றும் அவர் சொன்னார். மனநலச் சுகாதாரப் பிரச்சினைகளால் விளைவுகள் மோசமாக இருந்து வந்துள்ளன என்றும் அதனை முக்கியமாகக் கருத்தில்கொண்டு செயல்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் டாக்டர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

“அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படக்கூடிய விவகாரம் இது என்றுதான் நான் சொல்வேன். அதன் மூலம் கடந்த சுமார் 60 ஆண்டுகளாகப் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளின் தொடர்பில் இருந்திருப்பதுபோல் இரு நாடுகளும் ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொள்ளலாம், திட்டங்களை ஒன்றுசேர்ந்து நடத்தலாம், ஒன்றுக்கு மற்றொன்று ஆதரவு தரலாம்,” என்று டாக்டர் மூர்த்தி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) செய்தியாளர்களிடம் விவரித்தார்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 60 ஆண்டுகாலமாக இருந்துவரும் சுகாதாரப் பங்காளித்துவத்தை எண்ணித் தான் பெருமைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். பெரியம்மை (smallpox), இளம்பிள்ளைவாதம், காசநோய், கொவிட்-19 உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளில் இரு நாடுகளும் இணைந்து செய்லபட்டதாக டாக்டர் மூர்த்தி சுட்டினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட டாக்டர் மூர்த்தி, அந்நாட்டின் முன்னணி மருத்துவராகப் பதவி வகிக்கிறார். பொதுச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பது ஆகியவை அவரின் பொறுப்புகளாகும்.

டாக்டர் மூர்த்தி, அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை மருத்துவராகப் பதவி வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கராவார். அவரின் பெற்றோர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்