பாலக்காடு: அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கேரளச் சிறுவனின் சிகிச்சைக்காக அடையாளம் தெரியாத ஒருவர் ரூ.11 கோடி நன்கொடை வழங்கி நெகிழ்வித்துள்ளார்.
நிர்வாண் என்ற அச்சிறுவன் முதுகெலும்பு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனைக் காப்பாற்ற வேண்டுமெனில் விலையுயர்ந்த ஒரு மருந்தை வாங்க வேண்டும் என்றும் அதனால் அவனது சிகிச்சைக்கு ரூ.17.5 கோடி தேவை என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனையடுத்து, அவனது பெற்றோர் சாரங் மேனன் - அதிதி நாயர் தம்பதியர், 'கிரௌட்ஃபண்டிங்' எனும் இணையவழி நிதித்திரட்டில் இறங்கினர். ஆனாலும், அவர்களால் ரூ.5 கோடி மட்டுமே திரட்ட முடிந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை அடையாளம் தெரியாத ஒருவர் அவர்களது கணக்கில் 1.4 மில்லியன் அமெரிக்க டாலரைச் (S$1.87 மி., ரூ.11.6 கோடி) செலுத்தினார். அமெரிக்காவில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் அதனை அனுப்பியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
"அச்சிறுவனின் போராட்டம் குறித்து அறிந்ததும் நானும் உதவ வேண்டும் என்று நினைத்தேன். புகழுக்காக நான் இந்தப் பணத்தை வழங்கவில்லை. அச்சிறுவனின் பெற்றோர்கூட என் பெயரை அறிந்திருக்க மாட்டார்கள். அக்குழந்தையின் உயிரே முக்கியம், என் பெயரன்று," என்று அந்த வள்ளல் அந்த நிதித்திரட்டுத் தளத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அந்த விலையுயர்ந்த மருந்தை வாங்கும் முயற்சியில் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.

