புதுடெல்லி: ஒப்பந்தங்களைப் பெற பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் லஞ்சம் கொடுத்திருப்பது அமெரிக்க அதிகாரிகளின் அண்மைய உத்தரவுகளில் தெரியவந்துள்ளது. சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க 300 விழுக்காட்டுக்கு மேல் அவை அபராதம் செலுத்தியுள்ளன.
இந்தியாவில் தெற்கு ரயில்வே ஒப்பந்தங்களைப் பெற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துக்கு 500,000 அமெரிக்க டாலருக்கு மேல் (ரூ.4.2 கோடி) லஞ்சம் கொடுத்ததற்காக அமெரிக்காவை தளமாகக்கொண்ட ஆராய்ச்சி, வடிவமைப்பு நிறுவனமான மூக் இங் (Moog Inc) பிடிபட்டது.
‘மோஷன் கண்ட்ரோல் சிஸ்டம்’ என்ற கருவியை மத்திய ரயில்வேக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற 2020ல் அமெரிக்காவின் மூக் நிறுவனம் முயற்சி மேற்கொண்டது.
2020க்கு முன்பு வரை மத்திய ரயில்வேக்கு கருவியை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் மூக் நிறுவனம் சேர்க்கப்படவில்லை.
இதையடுத்து, ஒப்பந்தத் தொகையில் 10% தரகுத்தொகை தருவதாக இடைத்தரகர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ததில் 2021 நவம்பரில் எச்ஏஎல் நிறுவனத்திடம் கிட்டத்தட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை மூக் நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட மூக் இங்க் நிறுவனத்திற்கு கடந்த அக்டோபர் 11ஆம் தேதி ரூ.14 கோடி அபராதம் விதித்தது அமெரிக்க பங்கு வர்த்தக ஆணையம். இவ்விவகாரத்தில் சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க மூக் இங்க் நிறுவனம் மூன்று மடங்கு அபராதம் செலுத்தியுள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் கார்ப்பரேஷன், இந்திய ரயில்வே மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு, துருக்கி நாடுகளின் நிறுவனங்களுக்கு 6.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் (ரூ.57 கோடி) லஞ்சம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க பத்திரங்கள், பரிவர்த்தனை ஆணையத்தின் உத்தரவுகளின்படி அந்நிறுவனம் 23 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.193 கோடி) அபராதம் செலுத்தியது.
அமெரிக்காவைச் சேர்ந்த ரசாயனத் தயாரிப்பு நிறுவனமான அல்பெமார்லே கார்ப்பரேஷன், 2009-2011 காலக்கட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு 63.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் (ரூ.2,000 கோடி) லஞ்சம் கொடுத்ததற்காக அமெரிக்க நீதித்துறையால் பிடிபட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் உள்ள பல சூரிய சக்தி நிறுவனங்களுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் கொடுத்ததாக அதானி குழுமம் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டிய விவகாரம் எழுந்துள்ள வேளையில், பல அமெரிக்க நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது என்று மத்திய அரசுக்கு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கேள்வி எழுப்பி உள்ளார்.