அதானி மீதான வழக்கைக் கைவிட்ட அமெரிக்க நீதித்துறை

அதானி மீதான வழக்கைக் கைவிட்ட அமெரிக்க நீதித்துறை

2 mins read
8954219e-fc9a-465d-aba2-dcd9f1b894a4
கௌதம் அதானி. - கோப்புப் படம்: ஃபோர்ப்ஸ் இந்தியா
Google News Preferred Icon

வாஷிங்டன்: இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அவரது சகோதரர் மகன் சாகர் அதானி, இணைப் பங்குதாரர் வினீத் ஜெயின் ஆகியோருக்கு எதிரான அனைத்துக் குற்றவியல் குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுவதாக அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைக் கைப்பற்ற அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்தார் என்று அதானி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

மேலும், அனைத்துலக முதலீட்டாளர்களை ஏமாற்றும் வகையில் தவறான தகவல்களைத் தந்ததாகவும் கூறி அதானி குழுமத்தின் மீது கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை அந்நாட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஒன்றைத் தாக்கல் செய்தது. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. குறிப்பாக, இந்திய எதிர்க்கட்சிகள் அந்நாட்டு அரசைக் கடுமையாக விமர்சித்தன. அதானிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி அரசு முயற்சி செய்வதாகக் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில் திடீர்த் திருப்பமாக, இந்த வழக்கு இந்திய அதிகார வரம்பிற்குட்பட்டது என்றும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

தேவையற்ற முறையில் அமெரிக்க வளங்கள் திசைதிருப்பப்படுவதாகக் கூறி, வழக்கைக் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு நீதிமன்றம், அவ்வழக்கை விசாரணைக்குக் கொண்டுவர முடியாத வகையில் (’With Prejudice’) குற்றச்சாட்டுகளை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

அதேவேளையில், அமெரிக்கப் பத்திரங்கள், பரிவர்த்தனை ஆணையத்துடன் (SEC) எட்டப்பட்ட பொது ஒப்பந்தத்தின் அடிப்படையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமலேயே அமெரிக்க டாலர் 18 மில்லியன் தொகையைச் செலுத்த அதானி தரப்பு சம்மதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்